×

பனிப்பொழிவு, பொங்கல் பண்டிகையொட்டி பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது


வேலூர்: பனி பொழிவு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் பொய்கை மாட்டுச்சந்தைக்கு கால்நடைகள் வரத்து இன்று குறைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது, கடும் பனிப்பொழிவு மற்றும் பொங்கல் பண்டிகையொட்டி இன்று சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்துள்ளது. 600க்கும் அதிகமான மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் இன்று ₹50 லட்சம் அளவு மட்டுமே வியாபாரம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தொடர் மழையின் காரணமாக தீவனங்கள் இன்னும் சில மாதங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். இதனால் விவசாயிகள் அதிகளவில் பசுமாடுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்களாகவே இருப்பதால் இன்று கால்நடைகளின் வரத்து குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கால்நடைகளின் வரத்து அதிகரிக்கும்’ என்றனர்.

The post பனிப்பொழிவு, பொங்கல் பண்டிகையொட்டி பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Poikai market ,Pongal festival ,Vellore ,Poikai ,Tamil Nadu ,
× RELATED பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா